புத்தகங்கள் என் நண்பர்கள்

புத்தகங்கள் என் நண்பர்கள்

சின்ன வயசுல இருந்தே நிறைய படிக்கனும், தெரிஞ்சுக்கனும்னு ஆசை இருந்தது. எழுத்தாளர்களோட பேட்டி எல்லாம் பார்க்குறப்ப புத்தக அலமாரி மேல எப்பவும் ஒரு காதல் இருக்கும். அப்போ ஆரம்பமானது தான் எழுத்தின் மீதான காதலும், ஆசையும்..

தற்போது நிறைய புத்தகம் எழுதவில்லை என்றாலும் சில புத்தகங்களில் நான் எழுதியிருக்கிறேன். அதெல்லாம் பார்க்குறப்ப கனவு மாதிரி இருக்கு..

சில ஆண்டுகள் முன்பு வரை இரவு சாப்பிடக்கூட வழியில்லாமல் ஒரு கிளாஸ் பால் வாங்கிக் குடித்துவிட்டு படுத்து உறங்கிய நாட்கள் எல்லாம் உண்டு. அந்த நேரங்களில் எல்லாம் நான் புத்தகங்கள் வாங்க சிறுக சிறுக பணத்தை சேமித்து வைத்திருந்து வாங்குவேன். பிற்காலத்தில் நிலையான வீடு ஒன்றில் கண்ணாடிப் போட்ட புத்தக அலமாறி வைக்க வேண்டும் என்பது சிறுவயது கனவு..

குடும்ப சூழ்நிலைக் காரணமாக அந்த கனவு என் 23வது வயதில் தான் நிறைவேறியது. இப்போது 1200+ நூல்கள் தாண்டி விட்டது.

இந்த அலமாறியில் நிறையப் பேர் பரிசளித்த புத்தகங்கள் அலங்கரிக்கின்றன. குறிப்பாக ஆசிரியர் திருமாவேலன், எழுத்தாளர் கரிகாலன், செயற்பாட்டாளர் லிவிங் ஸ்மைல் வித்யா மற்றும் சில நண்பர்கள்.. இவர்கள் கொடுத்த நூல்கள் தான் நிறைய..

கஷ்டப்பட்ட காலத்திலும் என் கூட இருந்தவைப் புத்தகங்கள் தான். இன்று நான் இருக்க, இப்படி இருக்க புத்தகங்கள் தான் முக்கிய காரணம்.

புத்தகங்கள் என் உலகம்
புத்தகங்கள் என் நண்பர்கள்
புத்தகங்கள் ஒருபோதும் திட்டுவதில்லை
புத்தகங்கள் எங்குபோனாலும் கூடவே வரும்
புத்தகங்கள் ஏமாற்றுவதில்லை
புத்தகங்கள் துரோகம் செய்வதில்லை
புத்தகங்கள் வஞ்சம் வைப்பதில்லை
புத்தகங்கள் பொறாமைப்படுவதில்லை
புத்தகங்கள் பழிவாங்குவதில்லை
புத்தகங்கள் ஏளனமாய் பார்ப்பதில்லை
புத்தகங்கள் பொய் சொல்வதில்லை
புத்தகங்கள் என் கனவு உலகம்
புத்தகங்கள் எனது ஓய்வறை
புத்தகங்கள் என களிப்பிடம்
புத்தகங்கள் என் நண்பர்கள்
புத்தகங்கள் என் காதலிகள்..
புத்தகங்கள் என் உலகம் !
புத்தகங்கள் புரட்சி செய்யும்..

இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள் !

– ஜீ.கே.தினேஷ்

5/8/2018

5.45pm

https://wp.me/p3FXDf-5b

Advertisements

கேள்வி 1 – கேளுங்கள் தெரிந்ததை சொல்கிறேன்

கேள்வி 1
சேலத்திலிருந்து சசி..
சாதி கிராமங்களில் அதிகமாய் உள்ளதா இல்லை நகரங்களிலா ? இதற்கு என்ன தான் தீர்வு ?

கிராமங்கள் சாதியின் இருப்பிடம். காரணம் படிப்பறிவு இன்மையும், மூடப்பட்ட சமூக அமைப்பும்..

நகரங்களிலும் நவீன தீண்டாமை இருக்க தான் செய்கிறது..
அதனால் தான் கிராமங்கள் ஒழிய வேண்டுமென்றார் பெரியார்.

அதற்கு எதிர்கருத்தாக, கிராமங்கள் தான் நாட்டின் முதுகு என்றார் குலத் தொழில் அழிக் கூடாது என்று நினைத்த காந்தி.. குலத்தொழில் கடவுள் அந்த குலத்திற்கு கொடுத்த வரம் என்ற கருத்தியல் உடையவர் காந்தி. ஆனால், பல தாழ்த்தப்பட்ட சாதிகள் இன்றளவும் காலம்காலமாக துப்புரவு தொழிலிலும், கையால் மலம் அள்ளும் வேலையையும் செய்து வருகின்றனர். இதற்கும் அவர்கள் பிறந்த குலங்களும் சாதியும் தான் காரணம்..

ஆனால், விவசாயம், இந்து மதம் சாரா நாட்டார் வழக்கு குலத்தெய்வ வழிப்பாடு என நம் தமிழ் சமூகத்தின் அடித்தளமாய் இருப்பது கிராமம் தான் அதில் இந்த சனாதன தர்மமான எங்கோ இருந்து வந்த வரலாறு தெரியாத, அடித்தளமே இல்லாத ஹிந்து மதம் புகுந்துள்ளது.. அதனால் இந்து மதத்தை விடுத்து நம் சமூக பண்பாடுகளைப் பிரிப்பதை கஷ்டமாய் இருக்கிறது.. அதனால் தான் பெரியாரும், அம்பேத்காரும் ஒட்டுமொத்தமாய் இந்து மதத்தினை எதிர்த்தனர்.

தற்போது எனக்கு தெரிந்து பட்டியல் பிரிவில் 80+ சாதிகள் இருந்தாலும் பெரும்பாலும் இந்த கால தலைமுறை பறையர்கள் நிறையப் பேர் இடம்பெயர்ந்து விட்டனர். மள்ளர், அருந்ததியர் கொஞ்சம் குறைவு. மீதமுள்ள ஆதி ஆந்திரா போன்ற சாதி மக்கள் இடம்பெயர்ந்ததாக எந்த தகவலும் இல்லை.. இதுப்போக இதர பிற்படுத்தப்பட்ட சாதிகளில் பெரும்பாலும் சாதிய அடுக்குமுறையில் சிக்கி தவித்த சாதிகளும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய சாதிகளும் நிறைய இடம்பெயர்ந்திருக்கின்றன.

குடிப்பெயர்ந்தவர்கள் மீது பொறாமை, வன்மம் நிறைந்துள்ளதாக தெரிய வருகிறது. ஏனெனில், ஊரை விட்டு போய் சம்பாதிக்கிறான் என்றும், நமக்கு கீழ் அடிமையாய் பண்ணையம் இருந்தவன் படிக்கிறான் என்று நினைத்துக்கொண்டு சாதிய வன்மம் வைத்து ஊரில் உள்ள பெற்றோர்கள் தாக்கப்படுகின்றனர்.

கேள்வி : சரி இதற்கு என்ன தான் தீர்வு ?

கல்வியுடன் சேர்த்து சமூகக் கல்வி

சமூக வரலாறு

இடஒதுக்கீடு பற்றிய புரிதல்

பட்டியல் பிரிவினருக்கு உதவ மற்ற பட்டியல் இனத்தவருக்கு சொல்லித் தருதல், ஆண்ட சாதி பெருமைப் பேசாத OBC மக்களின் உரிமைகளையும் சொல்லித்தந்து அவர்களையும் ஒருங்கிணைத்தல் சரியான சொல்வதென்றால் இடஒதுக்கீட்டால் வந்தவர்கள் இன்னும் அந்த உரிமையை அடையாத மக்களைக் கைக்கொடுத்து தூக்கி விடுதல்

சாதியற்றவர்களாக அமைப்பாய் திரண்டு களத்தில் நின்றுப் போராடுதல்

ஜீ.கே.தினேஷ்

https://wp.me/p3FXDf-58

______________________
அரசியல் மட்டுமல்ல.. எதுவாயிருப்பினும் கேளுங்கள்.. எனக்கு தெரிந்ததை உங்களிடம் சொல்ல காத்திருக்கிறேன்..

கேளுங்கள்..

கேட்க நீங்கள் தயாரா ?

கேள்விகளை நேரடியாக என் எண்ணிற்கோ அல்லது பெயர் வெளியிட விரும்பாதவர்கள் இந்த முகவரியிலோ கேட்கலாம்..

gkdinesh.sarahah.com
👆👆👆

கேளுங்கள், தெரிந்ததை சொல்கிறேன் – அறிமுகம்

கேளுங்கள், தெரிந்ததை சொல்கிறேன் – அறிமுகம்

அரசியல் கல்வி, சமூகக் கல்வி இன்றியமையாதது ! ஆனால் இந்த கால தலைமுறை அதை ஏதோ சாக்கடை என்றுச் சொல்லிக் கொண்டு இருக்கிறது அதனால் தான் அரசியல்வாதிகள் நம்மை சாக்கடைக்குள் தள்ளி விடுகின்றனர். அதனால் அரசியல் கற்பது முக்கியமாகும் அப்படி அரசியல் பற்றி தெரியாதவர்கள் தெரிந்துக் கொள்ள எனது பிளாக்கில் தொடர் போல எழுத உள்ளேன். உங்கள் அரசியல் கேள்விகளுக்கு எளிமையாக பதிலளிக்க உள்ளேன்.

இப்படி எழுதுவதால் எனக்கு தனிப்பட்ட முறையில் சல்லி பைசா லாபம் கிடையாது. சமூகத்தில் ஒரு மாற்றம் என்னால் நிகழ்ந்தால் சந்தோசப்படுவேன். இதற்கு முன்பாகவே நான் எழுதும் கட்டுரைகளையும், முகநூலில் சில முற்போக்காளர்கள் எழுதும் கட்டுரைகளை என் நண்பர்கள், ஜூனியர்களுக்கு பகிர்வேன். அப்படிப் பகிர்ந்ததில் சித்தார்த், மீனா, கார்த்திகா போன்றோர் இப்பொழுது நேரடி அரசியலையும் அதற்கு பின்னால் இயங்கும் மறை அரசியலையும் புரிந்துக் கொள்ள ஆரம்பித்து விட்டனர். இது என்னால் தான் நிகழ்ந்தது என்று நான் மகிழ்கிறேன். இப்படி ஒவ்வொருவரும் அரசியல் அறிந்து பயனடைய தான் இந்த கேள்வி பதில் கட்டுரைத் தொடர்..

இப்படி நான் எழுதுவதற்கான காரணங்கள் இருக்கிறது. ஏனெனில், இங்கு கடந்து 100 ஆண்டுகளாக பல தலைவர்கள் அவர்களால் இயன்ற விசயங்களை பேசிக்கொண்டு வருகின்றனர் ஆனால், அவை பெரிய பெரிய புத்தகங்களாக இருப்பதால் தற்கால தலைமுறை அதை எடுத்துப் படிக்க சோம்பேறித்தனப்படுகிறது. இப்போதும் அரசியல் இயக்கங்கள் பேசிக் கொண்டு வருகின்றன. ஆரம்பத்தில் எனக்கும் புரிந்ததில்லை. ஆனால், பின் நிறையப் புத்தகங்கள் படித்ததால் தற்போது புரிகிறது. அந்த சிரமமின்றி உங்களுக்கு புரியும் வகையில் மிக சிறியதாக எழுத உள்ளேன். பெரும்பாலான நேரங்களில் இதுப்போன்று கேள்விக் கேட்பதற்கு எதற்கும் நான் டென்சன் ஆனதில்லை. ஆக, எதுவாயிருந்தாலும் கேளுங்கள் எனக்கு தெரிந்ததை உங்களிடம் சொல்ல காத்திருக்கிறேன்..

கேளுங்கள்..

கேட்க நீங்கள் தயாரா ?

கேள்விகளை நேரடியாக என் எண்ணிற்கோ அல்லது பெயர் வெளியிட விரும்பாதவர்கள் இந்த முகவரியிலோ கேட்கலாம்..

gkdinesh.sarahah.com
👆👆👆

வண்டை வண்டையா கேட்காம இருந்த சரி.. 😂🙈

தடத்தை தேடி !! இலக்கியம் படுத்தும் பாடு …

தடத்தை தேடி !!
இலக்கியம் படுத்தும் பாடு …
________________________

நேத்து இரவில் இருந்தே விகடனின் தடம் இதழை காலை பார்த்து விடலாம் என நினைத்திருந்தேன். கண்ணன் சார், தமிழ் மகன் சார், விஷ்ணுபுரம் சரவணன் அண்ணா எல்லாரும் வேற போஸ்ட் போட்டிருந்தாங்க. அதனால இன்னைக்கு வந்துடும் என தூங்கினேன். ஆனால் எழுந்ததே 8 மணிக்கு. அப்புறம் எப்படி கடைக்கு போக ? வகுப்புக்கு நேரமாச்சுன்னு போயிட்டேன். வகுப்பு முடிஞ்சதும் போய் வாங்கலாம்ன்னு கடைக்கு போனேன். எந்த கடைக்காரருக்கும் தடம் என்னான்னே தெரியல.. ஒரு கடையில எங்குட்டு போற தடம் தம்பி என்று ஒருவர். அவரிடம் விளக்கத்தை கொடுத்து அடுத்த ஏரியா கடைக்கு நகர்ந்தேன். அங்கேயுமில்ல.. 9.45மணிக்கு ஸ்ரீபதி அண்ணாவுக்கு கால் பண்ணி அண்ணா எங்க கிடைக்குதாம் தடம்ன்னு கேட்டேன். அப்புறம் தான் சொன்னாரு “தம்பி டீ இன்னும் வரல” ! இன்னைக்கு வந்திருச்சுல்ல அண்ணே ?
அது சென்னைக்கு தம்பி. இப்ப தான் லச்சு அன்னபூர்ணா வுல ஃபூல் மீல்ஸ் சாப்பிட்டு வந்தாரு. அப்ப பக்கத்துல இருந்த கடையில கேட்டாராம் நாளைக்கு தான்னு சொல்லிட்டாங்கலாம்ன்னு சொல்லிட்டார். அடப்பாவத்தே இந்த கால் முன்னாடியே பண்ணியிருக்கலாமே .. !!
தடத்தை தேடி.. கோயம்புத்தூர் ஒரு 30 கிலோமீட்டர் சிட்டியை சுத்தியாச்சு. ஒருவழியா நிறைய குறுக்கு சந்து எல்லாம் தெரிஞ்சுக்கிட்டேன்.

1 ஜூன் 2016

கோயம்புத்தூர்

சர்க்கரைக் கடல் கவிதை நூல் – மாதவன் அதிகன்

நூல் பெயர் : சர்க்கரைக் கடல்
எழுதியவர் : வெ. மாதவன் அதிகன்
பதிப்பகம் : புது எழுத்து
தொடர்புக்கு : madhavanadhigan@gmail.com
9600465592

எழுதியே நாட்கள் ஆகிவிட்டது. நூல் குறித்து எழுதி நீண்ட நாட்கள் ஆகி விட்டது. இந்த இடைவெளியில் நிறைய படித்துவிட்டேன். அத்தனையும் மிக நல்ல நூல்கள் அனைவரும் படிக்க வேண்டியவை. இனிமேல் படித்தவுடன் உடனே பதிவிடலாம் என இருக்கிறேன். இந்நூல் சர்க்கரைக்கடலை படித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. ஆமாம், நாட்கள் என்பதை விட ஆண்டுகள் ஆகிவிட்டது எனலாம். 2015ல் வாசித்துவிட்டேன். அப்போது கல்லூரி முடிந்து ஒரு டீக்கடையில் சந்தித்து பேசினோம். சிறிய உரையாடல் தான். ஆனால், அணு முதல் ஆறறிவு வரை பேசியிருப்போம். இப்போது வீட்டிற்கு வந்ததால் மறுவாசிப்பு செய்தேன். வழக்கமாக எனது கட்டுரைகள் நூல் விமர்சனம் போல இல்லாமல், நூல் அறிமுகம் போல தான் இருக்கும். ஏனெனில், வாசிப்பை தூண்டுதலை தான் என் தலையாயப் பணியாக கருதுகிறேன்.

இனி கவிதைகளைப் பார்ப்போம்.

அச்சம் கொள்ளாதீர்
நான் கடவுளல்ல

இவ்வளவு தான். இரண்டே வரிகள். அட சொல்ல வைக்கிறது.

நீங்கள் புகைத்துவிட்டுப் போட்ட சிகரெட்டுன் திமிர்பிடித்த நெருப்பு இவ்வனத்தை எரித்துக் கொண்டிருக்கையில் தன்னுடன் பறக்கப்பழகாக் குஞ்சுகளை மரங்களின் உச்சாணிக்கொம்புகளில் இருத்திவிட்டுத் தப்பிச்செல்லும் தாய்ப்பறவை உலகின் அறங்களின் மீது எச்சங்களை உமிழ்ந்து செல்கிறது.

மனிதத்தை இழந்து விட்ட இந்த சமூகத்தின் மீது இருக்கும் விரக்தியை ஒரு பறவையின் வாயிலாக இப்படியும் சொல்ல முடியும் எனக்கூறியிருக்கிறார்.

நமக்குள்ளிருக்கும் வெறிப்பிடித்த மெளனம் இவ்வுலகின் குருதியை ருசிக்கும் சொல்லொன்றை வைத்திருக்கலாம்
அது உலகை நோக்கி விழுகையில்
மெளனத்திற்கான பெருங்கலகமாய் உடையும் அச்சொல் ச்சீ என்பதாகக் கூட இருக்கலாம்

எல்லாம் கடந்து போயிற்று என்றான பின்னும் மீதமிருக்கிறது காதல்
காதலிக்கத்தான் யாருமில்லை

இரவு முழுக்க நிழல் கூட தீண்டாமல்
தனியறையில் இருந்து வெளியேறுகிறோம்
விடியலுக்குப்பின் நிர்வாணமாய் நிற்கிறது
உண்மை

உலகின் அறங்களும் நீதிகளும் போதிக்கப்பட்ட பின்பும்
ஒரு தேக்கரண்டிக் காமம்
எல்லாவற்றையும் எரித்து விடுகிறது

துப்பாக்கியின் நிழலில் உயிர்வாழ்தல் சுதந்திரமல்ல
சூனியமெனத் தெரிந்த பின்பும் உயிர்நீட்டித்தலென்பது எழுதப்பட்ட சாபம் தான் என்ன செய்வது இன்னமும் மீதமிருக்கிறது
எம் நிலமும் பொழுதும்

எல்லாக் குழந்தைகளிடமும் இருக்கிறது
வீடு திரும்பும் அப்பாகளிடம்
சமர்ப்பிப்பதற்கான குற்றப்பத்திரிகைகள்

என இவரது நூல் முழுக்க சிந்திக்க நிறையவே இருக்கிறது. மிகப்பெரிய விசயங்களை கூட அனாசியமாக இவரது எளிய வார்த்தைகளால் எழுதி தீர்த்திருக்கிறார். இன்னும் எழுதி தீரா எண்ணங்கள் மட்டும் மிச்சமிருப்பது நிச்சயமாக தெரிய வருகிறது. கரிகாலனின் வாழ்த்துரை கவிதைத் தொகுப்பிற்கு வழுச்சேர்க்கிறது..

அடுத்த வாரம் அவருக்கு திருமணம், இந்த கவிதைக்களுக்கான வாழ்த்துகளோடு அவரது இல்வாழ்க்கைக்கும் வாழ்த்திடுங்கள்..

– ஜீ.கே.தினேஷ்

பல்லுபடாத இடுப்புக்கிள்ளிகள் !

பல்லுபடாத இடுப்புக்கிள்ளிகள் !

பல்லுபடாத இடுப்புக்கிள்ளிகள் என்ற தலைப்புக்கும் இந்த கட்டுரைக்கும் சம்பந்தமில்லாமல் இருக்கலாம் ! ஆனால், சம்பந்தமும் இருக்கலாம் !!

போலி போராளி டைப் 1
ஸ்டேட்டஸ் மட்டும் போட்டா எல்லாம் சரியாகிடுமா ?

நீங்க உட்கார்ந்த இடத்தில இருந்து பண்ற அதைக் கூட பண்ணல.. பார்த்து ஜீ.. கல்யாணம் ஆகுமா ?

போலி போராளி டைப் 2
நாம் தமிழர்கள், அதனால் தமிழனாய் இணைவோம் !

அப்போ வா ஆதி தமிழன் இருந்த மாதிரி உங்க பொண்ணு, என் பையனுக்கு கொடு !

போராளி டைப் 3
மெரினா புரட்சி.. ஜல்லிக்கட்டுக்காக நாம எல்லாம் ஒன்னா திரண்டோமே அப்படி திரள்வோம் வாங்க பிரண்ட்ஸ்..

ஜல்லிக்கட்டு மாட்டுக்கு போராடுன மூளை இல்லாத ஆண்ட சாதி பெருமை பேசுற பயலுக எவனும் இங்க நடந்த சாதிய வன்கொடுமைகளுக்கு எதிரா திரண்டானா ?

போராளி 4
திராவிடத்தால் வீழ்ந்தோம் பிரண்ட்ஸ்

கட்சிகளை கருத்தியலையும் குழப்பி கொண்டதன் விளைவு இது.. திமுக போன்ற திராவிட கட்சிகள் மீது லட்சம் விமர்சனங்கள், குறைகள் கூட இருக்கலாம். ஆனா, கடைநிலை மக்களுக்கு திராவிட கருத்தியல் இல்லாம ஒரு ஆணியும் பிடுங்க தர முடியாது. ஆமா, திராவிடம் இல்லாம தான் நீங்க, உங்க அப்பா, உன் சொந்தமெல்லாம் படிச்சது ! மத்த மாநிலத்த விட நல்ல நிலைல தமிழ்நாடு இருக்கு ! எங்க திரும்பவும் கோரசா சொல்லுங்க.. திராவிடத்தால் வீழ்ந்தோம் பிரண்ட்ஸ்..

போராளி 5
டெல்லில இருந்துட்டு உனக்கென்ன ? இங்க என்ன நடந்தா என்ன ?

செத்தது என் சொந்தகாரனாவோ இல்லை சாதிக்காரனா இருந்தா தான் கண்ணீர் வரும்னா அதுக்கு பேர் கண்ணீர் இல்லை.. நாம தான் சாதியா பிரிஞ்சுகிடக்கிறோமே.. அப்புறம் எப்படிங்க ஒருத்தர் செத்தா வருந்த தோன்றும் ? செத்தது ஒரு உயிர் அவ்வளவு தான்.. அவன் எந்த ஊர்கன், சாதிகாரன், மதத்துகாரனு எல்லாம் எனக்கு தெரியாது..

போராளி 6
இதெல்லாம் ஒரு விசயமா ? இரண்டு நாளைக்கு பேசுவாங்க..

நீயும் செத்துடு ! ஒருநாள் சேர்த்து பேச சொல்றேன்..

போராளி 7
எல்லாம் காசு வாங்கிட்டு ஓட்டுப்போட்ட மக்களால தான்..

சரிப்பா.. நீ காசு வாங்கல.. போன முறை எலக்சன்ல யார் யார் உன் தொகுதில நின்னாங்க ? சொல்லு பார்ப்போம்..

அடிமை 1
ஐபிஎல் வேறு, போராட்டம் வேறு !
ஐபிஎல் க்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் ? சினிமா, ஐபிஎல் எல்லாம் எண்டர்டெய்ன்மெண்ட்..

ஆமா, வேற வேற தான் ! எல்லாம் கார்ப்பரேட் தான் என்பதை மறக்க வேண்டாம் ! உன் இனத்தில் 13 பேர் செத்திருக்காங்க.. அதற்கு காரணம் மறைமுக கார்ப்பரேட் ஆளுகை தான் அதை நீ உணர விடாம சினிமா நடிகன், ஜல்சா வீடியோ, கிரிக்கெட்னு ஒவ்வொன்னா இறக்குவானுங்க அத பார்த்துட்டு உன்னோட ஆறாம் உணர்வை, மனிதநேயத்தையே இழந்துட்டு இருக்கனு உனக்கு புரியுறது எப்போ ? உன் மூளையையும் போராட்ட எண்ணத்தைக் மழங்கடிக்க செய்கிறது. அது என்று புரியுமோ ? ஊரே ஒப்பாரி வைக்குறப்ப விசில் போடு சொல்றது எவ்வளவு மனிதத்தன்மையற்ற செயல்..

அடிமை 2
ஸ்டேட்டஸ் போட்டா தான் வருந்துறோம்னு அர்த்தமா..

நீ செத்த குடும்பத்துக்கு எதுவும் பண்ண வேணாம். உன் வருத்தத்தை நாலு பேருக்கு ஸ்டேட்டஸ் போட்டாவது பகிர்ந்துக் கொள்ளலாம் இல்லையா ?

சி எஸ் கே ராக்ஸ்னு மட்டும் என்ன மானாவுக்கு போடுற ? உனக்கு பிடிச்ச அணி ஜெயிச்சிடுச்சுனு சந்தோசத்தை வெளிப்படுத்த தான ?

அடிமை 3
எனக்கு இதுகெல்லாம் நேரம் இல்ல.. அரசியல் ஒரு சாக்கடை !

ப்ளீஸ்.. செத்துருங்க..

அடிமை 4
போராட்டத்தை திருமுருகன் காந்தி, பாரதிராஜா, கவுதமன், சீமான் தான் தூண்டிவிடுறாங்க அதனால போராட்டத்துக்கு போகாதிங்க..

அந்த தூண்டிவிட்டவர்கள் தான் ஜெயிலுக்கும் போயிருக்காங்க.. தூண்டி விட்டவனா இருந்தா ஏன் ஜெயிலுக்கு போகனும் ? இனவெறியை தூண்டி விடலாம். விடுதலை வேட்கையையும், உரிமை தாகத்தையும் யார் தூண்டி விட்டும் வராது. நல்ல பொறப்பா இருந்தா இரத்தத்துல, உணர்வுலயே இருக்கும் !

அடிமை 5
இதே ரஜினி இருந்தா கழட்டி இருப்பார், கமல் இருந்தா பிடுங்கியிருப்பார்..

ஆமா, கடந்த 40, 50 வருசமா அந்த ராஜாக்கள் டிப்பன் மட்டும் தான் பண்ணிக்கிட்டு இருக்கிறார்கள்..

அடிமை 6
எனக்கு என் குடும்பம் தான் முக்கியம்..

ரொம்ப நல்லது போய் குடும்பத்தை பாருங்க.. ஐபிஎல் விட குடும்பம் முக்கியம், ஆனால் உன் குடும்பத்த விட இந்த சமூக முக்கியம் ஏன்னா உன் குடும்பமும் இந்த சமூகத்துல தான் இருக்கு..

அடிமை 7
என்னோட தனிப்பட்ட உரிமை அது எனக்கு தோணுச்சுனா ஐபிஎல் பார்ப்பேன்.. அதுல ஏன் தலையீடு செய்யுற..

ரொம்ப நல்ல கேள்வி.. இப்படியே ஒவ்வொருத்தனும் இருக்கிறது தான் இந்த நாட்டின் சாபக்கேடு.. இத நான் சொல்லி தான் புரியனும்னு இல்ல.. மனிதம் இல்லாம பேசுறீங்கனு புரியலயா ?

அடிமை 8
போராட்டத்தை தூண்டியவர்கள் அனைவரும் ப்ரிஞ் எலிமண்ட்ஸ்..

ஆமா, உன் உரிமைக்கும் சேர்த்து போராடுவன் அப்படி தான் சொல்லுவிங்க..

அடிமை 9
நீ ஒருத்தன் செய்யுறதால தனிமரம் தோப்பாகாது..

நல்ல வேளையாக சேகுவேரா காலத்திலும், அவர் வசித்த இடத்திலும் இந்த கேணத்தனமான பழமொழி இல்லை.. தனிமரத்தை தோப்பு என்று சொல்ல முடியாது தான் ! ஆனால், தோப்பாகாது என்பதை எந்த கூறுக்கெட்ட சோசியனிடம் கணித்தீர்கள் ? எதிர்காலத்தை முன்பே சொல்ல நீங்கள் யார் ?

அடிமை 10
சூப்பர் போலிசு.. நல்லா சுடுங்க அவங்கள..

ஒருநாள் துப்பாக்கி 🔫 உன்னையும் குறிப்பார்க்கும் அன்று வருத்தப்பட நாங்கள் இருக்கக் கூட மாட்டோம்.. ஏனெனில், அன்று மனிதம் செத்துப்போயிருக்கும்..

ஆக இவங்க தான் அந்த பல்லுபடாத அடிமைகளும்
இடுப்புக்கிள்ளி போராளிகளும்..

இவங்கிட்ட ஒரே ஒரு டவுட்.. அதெப்படி எந்த போராட்டம்னாலும் இஸ்லாமியர்களும், மீனவர்களும், தலித்களும் மட்டும் இறுதியில் தாக்கப்படுகின்றனர் ? #Remember Marina on last day..

போராட்டம் எனது பிறப்புரிமை.. இழந்த என் உரிமைகளைப் போராடி தான் பெற முடியும்..

ஜீ.கே.தினேஷ்
எழுத்தாளர்

இனி வரும் காலமும் வருங்காலமும் !!

இனி வரும் காலமும் வருங்காலமும் !!

இந்த நான்கு ஆண்டுகள் பழகி கழித்தோம்
இனிவரும் ஆண்டுகள் எப்படி உன்னை பார்க்காமல் கழியும் ??

இனி புகைப்படத்தில் மட்டுமே சிரிப்பொலியை கேட்க முடியும்

எடுத்துக் கொண்ட புகைப்படங்களோடு மீதி வாழ்க்கையை வாழ வேண்டி வரும்

இனி சாப்பாட்டு தட்டில் ஒரு கை மட்டுமே இருக்கும் அதுவும் உன் கையாக தான் இருக்கும்

ஸ்லாம் புக்கை திருப்பி பார்த்து பார்த்து பேப்பரில் அழுக்கேறி இருக்கும்

நாளாக நாளாக எழுத்துக்கள் கூட அழிந்து விடும்

இருந்தாலும் உண்மை நண்பனின் நினைவுகள் என்றுமே அழியாமல் நிலைத்திருக்கும்

போனில் உள்ள அலாரம் இனி தேவைப்படாது

இனி வித விதமான சட்டைகளை அணிய முடியாது

அப்படியே அணிந்தாலும் அதில் நண்பனின் வியர்வை வாடை இருக்காது

விண்ணை பிளந்த விசில் சத்தம் இருக்காது

சுதந்திரமாய் திரியும் பறவைகளை பார்த்து பொறாமை பட வேண்டி வரும்

எப்போது எடுத்து எழுதுவோம் என பேனா கூட அழ கூடும்

தினமும் வேலைக்கு செல்ல வேண்டி வரும்

பீர் பாட்டில் பிராந்தி பாட்டில் ஆகும்

எந்த கட்டாயத்திற்காகவும், யாருடைய கட்டாயத்திற்காகவும் இனி புத்தகத்தை எடுக்க தேவையில்லை

அப்பா அம்மா என்ன தான் கனிவுடன் பேசினாலும் குற்றவுணர்வு இருக்கும்

இனிவரும் பிறந்த நாட்களை யார் கொண்டாடுவார்கள்??

நள்ளிரவில் யார் மூஞ்சியில் கேக் பூசி விளையாடுவது ??

மழை வந்தால் யாருடன் நனைந்து விளையாடுவது ??

நாலு வருடங்கள் பழகிய நண்பர்களை பிரியவே கஷ்டப்படுகிறோம் நாம்

ஒவ்வொரு வருடமும் நான்கு வருடங்கள் பழகிய நண்பர்களை பிரியும் கல்லூரியை நினைத்து பார்த்து மனதை தேற்றி கொள்ள தோன்றும்

இனி ஆட்டம் இருக்காது

இசை இருக்காது. இருந்தாலும் ரசிக்க தோணாது

கால் கிலோமீட்டர் நடக்க கூட மூச்சு வாங்கும்

மீண்டும் கல்லூரிக்கு செல்ல முடியாதா என மனது துடிக்கும்

வார்த்தைகள் பல இருந்தும் பேசுவதற்கு வார்த்தைகளை தேட வேண்டி வரும்

தொண்டை கனக்கும்
உடல் விம்மும்
நாடி துடிக்கும்
உதடு உதறும்
பேச்சு பதறும்

கைகள் தோள்களை தேடும்
ஒன்றாய் சுற்ற கால்கள் தேடும்

காட்டிலிருந்து வெட்டி வீசப்பட்ட தனிமரமாய் தனிமையில்

நாலு ஆண்டுகள் யாரிடம் பழகாமல் இருந்திருக்கலாமோ எனக் கூட தோன்றும்

யார் யாருக்கு எப்படிப்பட்ட மனைவி/கணவன் என்பதை பொறுத்து தான் இனி நம் நட்பும் !!!

இனி வரும் காலமும், வருங்காலமும் நல்லதாகவே அமையட்டும்…………………

வாழ்த்துகள் !!

-கண்ணீருடன்,
ஜி.கே.தினேஷ்
17.05.2015 இரவு 11.45 மணி